வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டடங்கள், மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள், வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம், ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது.
வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை. கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம். ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.
மெகஸ்தனீஸ் (கி.. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். தங்களது பயணக்குறிப்புகளில் மதுரை குறித்துக் கூறியுள்ளனர். மார்க்கோ போலோ கி.பி. 1293-ம் ஆண்டு மதுரை வந்துள்ளார்.
வரலாறு: தனஞ்செயன் என்ற விவசாயி ஒருறை வனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும், கடவுள்களின் கடவுளான இந்திரன் அதை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த செய்தியை, மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட மன்னர், சுயும்பு லிங்கத்தை மையமாக வைத்துக் கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் உத்தரவிட்டார்.
நகரம் உருவானது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மன்னர் உள்பட அனைவரும் யோசித்தனர். அப்போது, சிவன் அங்கு தோன்றி, தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவினார். இதையடுத்து புதிய நகருக்கு மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்ற பொருளில் இப் பெயர் வந்தது.
மதுரை நகரம் பலமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது. சிவன் தனது 64 திருவிளையாடல்களை இந்த புராதன நகரில்தான் நிகழ்த்தினார்.
சோழ மன்னர்கள் கி.பி. 10-வது நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையைக் கைப்பற்றும் வரை மதுரை மாநகரம் சொர்க்க பூமியாக இருந்தது. பாண்டிய மன்னர்களின் காலமே, மதுரையின் பொற்காலமாக கூறப்படுகிறது. 13-வது நூற்றாண்டின் துவக்கம் வரை மதுரை, சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்களிடமிருந்து கி.பி. 1223-ம் ஆண்டில் மதுரையை, பாண்டியர்கள் மீட்டனர். மறுபடியும், மதுரை மலர்ச்சி கண்டது.
பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் மொழி பெரும் வளர்ச்சி கண்டது. கணவன் கொலை செய்யப்பட்டதும், ஆவேசமடைந்து மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றுக் காதையான, சிலப்பதிகாரத்தின் கதைக் கரு மதுரையை மையமாகக் கொண்டது. வேறு பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளும் மதுரை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. 1311-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி பாதுஷா, அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், மதுரை மீது படையெடுத்தார். மதுரை நகரிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பிற பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.
மாலிக்காபூர் படையெடுப்பிற்குப் பிறகு வேறு சில கம்மதிய மன்னர்களும் மதுரையை பல்வேறு கட்டங்களில் ஆக்கிரமித்துள்ளனர். 1323-ல் துக்ளக் மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது, தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை இருந்தது.
1371-ல் ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகர மன்னர்கள் மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். இதையடுத்து விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை மாறியது. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் பழக்கம். எனவே மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு, 1530-ல் நாயக்கர்கள் தனி அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத் துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் மிகப் பிரபலமானவர். மக்களிடம் அதிக நற்பெயரைப் பெற்றவர். மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம், புது மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், மஹால் அரண்மனை ஆகியவை அவர் கட்டியவை.
1781-ல் மதுரை, ஆங்கிலேய, கிழக்கிந்திய கம்பெனியரின் கைக்கு மாறியது. மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார். இவரே, மதுரையின் முதல் ஆட்சியர் ஆவார்.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்தும், இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக விளங்கி வருகிறது.
மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவப்ைபுதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் மதுரையின் மிச்சங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவப்ைபுகளின் பட்டியலில் மதுரையும் உள்ளது, மதுரை மக்களுக்குப் பெருமை அளிப்பதாகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு மதுரை, தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக மாறியது. இன்று சென்னைக்குப் பிறகு முக்கிய நகராக மதுரை உள்ளது. பாரம்பரியம், புராதன வரலாறும், செறிவான கலாச்சாரப் பின்னணியுமே, இந்தப் பெருமையை மதுரைக்குக் கொடுத்துள்ளது.
இன்றைய மதுரை: இன்றைய மதுரையின் உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னைக்குப் பிறகு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நகரம் மதுரைதான். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரைக்கு தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும்.
22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக மதுரை நகரம் உள்ளது. நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் மிகவும் பழமையான பின்னணியைக் கொண்டவை. வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில், மேல மாசி வீதியில் உள்ள நக்கீரர் கோவில் ஆகியவை வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. செல்லத்தம்மன் கோவிலில் கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகி சிலையைக் காணலாம்.
சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பொதுத் தகவல்கள்
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
மக்கள் தொகை: 10,93,702 (1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி).
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.
குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா.
No comments:
Post a Comment