Tuesday, 13 March 2018

அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது


“ஒரு நாள் வழக்கம்போல நான் ஜாகிங் செய்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.
சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.
அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன. என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.
இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……..அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!
‘அப்பாடி, முந்தி விட்டேன்!’
பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!
சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.
இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.
இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?
நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?
நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.
நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.
இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.
சற்றே சிந்திக்கலாமா நட்பூக்களே

No comments: