Tuesday, 13 March 2018

அவசரம் 108... தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 இன் 1 செயலி


நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது. விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல்துறைக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம். அவசரம் 108 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் தொடர்புகொண்டால் அழைக்கும் இடத்தை கட்டுப்பாட்டு அறையால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். சென்னை தலைமைச் செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக 22 புதிய வாகனங்களை பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போன்று 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக நாட்டிலேயே முதன்முறையாக 'அவசரம் 108' என்ற செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 108 ஆம்புலன்ஸ் வாகன உதவியை எளிதில் பெய அவசர 108 என்ற செயலியை ஐஐடி தயாரித்து அளித்துள்ளது. இது இன்று முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 108 உதவி மையத்திற்கு நாள்தோறும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவற்றல் 50 சதவீதம் ஆன்ட்ராய்டு போனில் இருந்து தான் அழைப்பு வருகிறது. எனவே விபத்து நடந்த பகுதியை எளிதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்டுபிடிக்கும் வகையில் இந்த செயலி உதவும். app for android ஆன்டிராய்டு போன்களில் கூகுள் பிளேஸ்டோர் மூலம் அவசரம் 108 (Avasaram 108) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். காவல்துறை, விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு இந்த ஒரே செயலி பயன்படும். இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு சென்றுவிடும். இணையதள வசதி இல்லாமல் குறுந்தகவல் மூலமாக புகார் செய்யும் வசதியையும் முயற்சித்து வருகிறோம். இதே போன்று ஆன்ட்ராய்டு தவிர்த்து மற்ற போன்களில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலியின் சேவை விரிவாக்கம் செய்யப்படும். தமிழகத்தில் மெட்ரோ சிட்டிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை 10 நிமிடத்திலும், கிராமப்புறங்களில் 14 நிமிடத்திலும் சென்றடைகிறது. மேலும் டூ வீலர் ஆம்புலன்ஸ் சேவை 9 நிமிடத்தில் மக்களை சென்றடைகிறது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

No comments: