Tuesday, 24 January 2017

தெரியுமா சேதி ? எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது?

தெரியுமா   சேதி ? எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது?

நீங்கள் அமெரிக்கா சென்றால், அங்கு எந்தப் பொருளையாவது வாங்க விரும்பினால் அந்த நாட்டின் பணமான டாலர்கள் கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் நமது நாட்டு பணத்தைக் கொடுத்து டாலர்களை மாற்றாக பெற்றுச் செல்ல முடியும்.

அங்கு நமது நாட்டு ரூபாய்க்கும், அந்த நாட்டின் டாலருக்கும் சரியான மதிப்பிட்டு தொகையை வழங்குவார்கள்.

உதாரணமாக நீங்கள் அறுபது ரூபாய் கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலரை திரும்ப பெறலாம். அதாவது ஒரு அமெரிக்க டாலர், இந்திய பணமதிப்பில் 60 ரூபாய்க்குச் சமமாகும். இந்த மதிப்பை எப்படி கணக்கிடுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

உலக பணப்பரிமாற்ற மதிப்பு ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலத்தில் சந்தையில் ஏற்படும் இறக்குமதி, ஏற்றுமதி தேவையைப் பொறுத்து இந்த பணமதிப்பு அவ்வப்போது மாறுபடும். இந்தியாவைப் பொருத்த அளவில் 1991 முதல் இந்திய- அமெரிக்க பண மதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நீடித்து வருகிறது.
நாடுகளின் பணமதிப்பு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும், கட்டற்று உயர்ந்துவிடுவதும் ஏற்றுமதி இறக்குமதியை மட்டுமே சார்ந்ததல்ல.

அரசியலில் நிகழும் முக்கிய மாற்றங்கள், அரசியல் ஸ்திரத்தன்மை, நாட்டு கடனின் வட்டிவிகிதம், கையிருப்புகள், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் பலவற்றையும் சார்ந்தது. முக்கியமான இவற்றைப் பொறுத்தே ஒருநாட்டின் பணமதிப்பு ஏற்றமோ, வீழ்ச்சியோ அடைகிறது. தேவைக்காக இறக்குமதி அதிகரிக்கும்போது அயல்நாட்டு பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டின் பணமதிப்பு உலக நாடுகளில் சரிவடையாமல் இருக்கும்படி கவனித்துக் கொள்கின்றன. பணத்தின் மதிப்பு ஏறி இறங்குவது அன்றைய  நிலவரத்தை பொறுத்தது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.